Saturday, 20 October 2012

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுக்கும் கருநாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தைக் கொடுக்காதே!




தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுக்கும் கருநாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தைக் கொடுக்காதே! - நெய்வேலியில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான தமிழர் தலைவர் அவர்கள், 90 வயதைக் கடந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அரியலூர் மாவட்டம் பொதுக்குழு உறுப்பினர் மு.சிங்காரம் பங்கேற்றதைக் கழகத் தோழர்கள் மத்தியில் அவரது மனஉறுதியையும் கொள்கை பிடிப்பையும் எடுத்துக்கூறி பாராட்டி பயனாடை அணிவித்தார் (நெய்வேலி, 15.10.2012).

Saturday, 6 October 2012

புரட்டாசி சனிக்கிழமை -தந்தை பெரியார்



    அடுத்தாற்போல் வரும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக்கிழமைப் பெருமாள்கள் உள்ள ஊர்களின் உற்சவங்களும், சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக்கொண்டு சோம்பேறிகளையும் அயோக்கியர்களையும் மெனக்கட்டுத் தேடிப் பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக் கொண்டும் போகக்கூடிய அளவு மேல்கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போறாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்தச் சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி 4 மணி சுமாருக்கு சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேட்கின்றேன். புரட்டாசி சனிக்கிழமை வந்தால் எத்தனை பேர்கள் தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு செம்புக்கும் நாமத்தை குழைத்து போட்டுக் கொண்டு, துளசியை அரளிப்பூவையும் அந்த செம்புக்கு சுத்திக் கொண்டு வெங்கிடாசலபதி கோவிந்தா என்றும் நாராயணா கோவிந்தா என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக் கொண்டு போவதில் ஏதாவது பலனுண்டா? என்றுதான் கேட்கின்றேன்.

    மற்றும், திருப்பதிக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு தலை மயிரும் தாடி மயிரும் வளர்த்து வெறும் மஞ்சள் நனைத்த துணிக்கட்டிக் கொள்ளுவதும் மேளம் வைத்துக் கொள்வதும் பெண்டுபிள்ளைகள் சுற்றத்தார்களை அழைத்துக் கொள்வதும் வருஷமெல்லாம் பணம் போட்டு மொத்தமாய் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின் மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ வேறு வரும் படியிலோ லாபத்தில் இத்தனை பங்கு என்று கணக்கு வைத்து சேர்த்து எடுத்துக் கொள்வதும் ஆன பணமூட்டை கை கட்டிக்கொண்டு கடைவாயிலும் நாக்கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக் கொண்டு போதாக்குறைக்குத் தெருவில் கூட்டமாய் கோவிந்தா கோவிந்தா- கோவிந்தா! என்று கூப்பாடு போட்டு வீட்டுக்கு வீடு, கடைகடைக்கு காசு பணம் வாங்கி ஒருபகுதியை ரயிலுக்குக் கொடுத்து திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலையேறுவதும் ஆண்களும் பெண்களும் தலைமொட்டை அடித்துக் கொள்வதும் அந்தமலைச்சுனைத் தண்ணீரில் குளிப்பதும் அந்த பட்டை நாமம் போட்டுக் கொள்வதும் கொண்டுபோன பணத்தைக் கடாரத்தில் காணிக்கையாக கொட்டுவதும் ஆண்களும் பெண் களும் நெருக்கடியில் இடிபடு வதும் பிடிபடுவதும் வெந்ததும் வேகாததுமான சோற்றை தின்பதும் மற்றும் பல சோம்பேறிகளுக்கும் மேகவியாதிக்காரர்களுக்கும் வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும் விறகு கட்டை யிலும் வேர்களிலும் செய்த மரமணி மாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக் கொள்வதும். மலைக் காய்ச்சலோடு மலையைவிட்டு இறங்கி வருவதும் வீட்டுக்கு வந்து மகேஸ்வரபூஜை பிராமண சமார்த்தனை செய்வதும் தவிர மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ, கூடப்போன மக்களுக்கோ நாட்டுக்கோ ஒழுக்கத்திற்கோ மதத் திற்கோ கடுகளவு நன்மை உண்டாகுகின்றதா என்று கேட்கின்றேன்.
திருப்பதிக்குப் போய் வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க்குணங் களையோ கெட்ட செய்கைகளையோ விட்டுவிட்டதாகவாவது அல்லது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரி குணங்களை விடும்படி செய்ததாகவாவது நம்மில் யாராவது பார்த்திருக் கின்றோமா? என்று கேட்பதுடன் இம்மாதிரி அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருஷத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணராவது கணக்கு போட்டார்களா என்று கேட்கின்றேன்.

காவிரி கருநாடகத்துக்கே எனில் தமிழ்நாடு யாருக்காம்?


- க. சிந்தனைச்செல்வன்
அரியலூர் மாவட்ட செயலாளர்



    

     பிரச்சினைகளுக்கு மத்தியில் மட்டுமே வாழ்கின்ற இனமான தமிழனின் இன் றைய தேதிக்கான பிரச்சினை காவிரிநீர் கண்களில் கவலையோடு காவிரிக்காக காத்திருக்கும் டெல்டா மாவட்ட விவ சாயிகள். நீரின்றி அமையாது உலகு என்றான் வள்ளுவப் பெருந்தகை. மூன் றாம் உலகப் போர் நடக்கப் போவது தண்ணீருக்காகவே என்கிறார்கள் ஆய் வாளர்கள். இப்போது தமிழ்நாடு தண்ணீ ருக்காக பக்கத்து மாநிலங்களோடு போராட - போரிட வேண்டியிருக்கிறது.
பிச்சையா? உரிமையா?
இயற்கை அமைப்பின்படி தமிழ்நாட் டின் பாசனத்திற்கு தேவையான நீரை காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவை தான் கொடுத்து வருகின்றன. காவிரியில் புதிது புதிதாய் அணைகளைக் கட்டி தண்ணீரை கருநாடகா தேக்கிக் கொண்டதால் தமிழன் கண்ணீரையே பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டிய நிலை. தனக்கு மிஞ்சிதானே தானதருமம் என்று பிரச்சினையின் தன்மை புரியாமல் பேசும் மூடர்களாய் வாழும் மக்கள் கூட்டம் ஒருபுறம். காவிரி கருநாடகத்தில் தோன்றுவதால் அவர்களுக்கு மட்டுமே உரிமை என்ற தவறான புரிதலோடு பிரச்சினையை அணுகும் யாராக இருந் தாலும் உலகியல் சட்டப்படி, நியாயப்படி நீரியல் சட்டப்படி ஆயக்கட்டு உரிமை என்பது கடைமடைப் பகுதி வரை அனை வருக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காவிரி நீர் என்பது தமிழர்களின் உரிமை  - பிச்சையல்ல. நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்கிறான். விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்படும் போது - முது கெலும்பு முறிக்கப்படும்போது கண்டும் காணாமல் இருக்கும் நடுவண்அரசு.
அந்நியன் ஆண்டபோது...
காவிரிநீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக 1892ஆம் ஆண்டு பழைய மைசூரு அரசுக்கும், சென்னை அரசாங்கத் துக்கும் வெள்ளையர்கள், அந்நியர்கள் ஆண்டபோது ஒப்பந்தம் போடப்பட்டு அது பின்னர் 1924ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. 50 ஆண்டு களுக்கான அந்த ஒப்பந்தம் 1974ஆம் ஆண்டு மறுஆய்வு செய்து புதுப்பித் திருக்க வேண்டும். 1974 முதல் கருநாடகா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுத்து வஞ்சித்து வருகிறது. பல முறை பேச்சு வார்த்தை என்ற பெயரால் ஏமாற்று வேலை நடத்தியது கருநாடக அரசு.
நடுவர் மன்றம் அமைத்திட
பிரச்சினையை தீர்க்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று 1980-களிலேயே சொன்ன இயக்கம் திராவிடர் கழகம். நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பதற்காக போராடி சிறை சென்ற தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி. அந்த கருத்து நாளும் வலுப் பெற்று சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் ஆட்சிக் காலத்திலே நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, விசாரித்து இடைக்கால தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று சொன்ன போது அதையும் அமல்படுத்தவில்லை கருநாடகா. அணை நிரம்பி உடையும் நிலை வந்தால் மட்டுமே தண்ணீரை திறந்து விடும் போக்குதான் இன்றளவும் தொடர்கிறது.

காவிரி நதியில் மொத்தம் உள்ள 740 டி.எம்.சி. தண்ணீரில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. தண்ணீரும், கருநாடகா 270 டி.எம்.சி., கேரளா 30 டி.எம்.சி., புதுச்சேரி 7 டி.எம்.சி. தண்ணீரையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று 2007 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. 9 ஆண்டுகளுக்குப்பிறகு நீதிமன்ற கட்டாயத்தின் பேரில் கூடிய காவிரி நதிநீர் ஆணையம் 19.9.2012 அன்று கூடி கலைந்தது. தமிழ்நாட்டின் குறைந்தபட்ச தேவையான ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் வேண் டும் என்ற தற்காலிக கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டு 9000 கனஅடி நீரை (3/4 டி.எம்.சி) திறந்துவிட பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டார். அதையும் நிறைவேற்ற மறுத்து அடம்பிடிக்கிறது கர்நாடகா. தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது கருநா டகா காவிரியில்  உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். இல்லையேல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. மீண்டும் துவங்கிவிட்டது கருநாடகாவில் போராட்டம் - ஆர்ப்பாட்டம் மறியல், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்காதே காவிரி கருநாடகாவுக்கே என்றெல்லாம் ஆர்ப்பரிக்கிறார்கள். கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம், போக்குவரத்து பாதிப்பு எல்லைகளில் வாகனங்கள் நிறுத்தம் சாம்ராஜ் நகர், மாண்டியா மாவட்டங்களில் தொடரும் போராட்டம். உருவ பொம்மைகள் கொளுத்துதல் என்று சண்டித்தனம் செய்யும் கன்னடர்கள். தமிழ் நாட்டை அச்சுறுத்த நினைக்கிறார்களா?
தேசியம் பேசும் கட்சிகள்
தேசியம் என்பது மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தை என்றார் பெரியார். இந்திய தேசிய மயக்கம் கொண்ட ஒருமைப்பாடு பேசும் காங்கிரசு, பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநிலத்திற்கு மாநிலம் கட்சிநலன், ஓட்டு நலன், கருதி இரட்டை வேடம் போட்டு இந்திய தேசியம் என்பதே பித்தலாட்டம் என்று நிரூபிக் கிறார்கள். தமிழன் இன உணர்வு பேசினால் வகுப்புவாதம், பிரிவினைவாதம் என அலறும் தேசியக் கட்சிகள் செய்வது என்னவகை அரசியல்! தமிழர் நலனைப் புறக்கணித்து இந்திய தேசியத்தை காட்டிக் காக்கும் வெறியோடு செயல்படும் கட்சிகளை புறந்தள்ளுவோம்.
ஜனநாயகம் என்ற பெயரால் தந்திரத்திலும் வஞ்சகத்திலும், மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட, துப்பாக்கியாலும், பீரங்கியாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது என்றார் பெரியார்.
தோழர்களே ஜனநாயகம் என்ற பெயரால் நடக்கும் கேலிக் கூத்துகளை ஒதுக்க வேண்டாமா? ஈழப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, இடஒதுக்கீட்டு பிரச்சினை, முல்லைப் பெரியாறு, காவிரிநீர் இப்படி எல்லாவற்றிலும் நம்மை வஞ்சிக்கின்ற தேசியம் நமக்கு தேவையா என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டாமா? தனியாட்சியல்ல - மாநில சுயாட்சிகூட வழங்க மறுப்பது நியாயமா? வரலாற்றின் பக்கங்களில் இந்தியா ஒரே நாடா? காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை 5 ஆண்டுகளுக்கு மேலாக கெசட்டில் வெளியிடாத காவிரி நடுவர் மன்றத்திற்கு தலைவரை நியமிக் காத மத்திய அரசு தமிழகத்தை தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறதா - இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பிரதமர் உத்தரவை ஏற்க மறுக் கும் கருநாடகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன்?
தமிழர்களே, தமிழ்நாட்டு நலனைப் புறக்கணிக்கின்ற யாரையும் புறக்கணிக் கின்ற மனநிலை நமக்கு வர வேண்டும். கருநாடகத்தின் தேவைக்கு போகத்தான் காவிரி நீர் தமிழ் நாட்டுக்கென்றால் நமது தேவைக்கு போகத்தான் நெய்வேலி மின்சாரம் அடுத்தவனுக்கு என்று நாம் சொல்ல வேண்டும் ஒரு சொட்டு நீர் கூட தர மாட்டோம் என்றால் யூனிட் மின்சாரம் கூட அளிக்க முடியாது கூடாது என்ற நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். உணர்ச்சி பெற வேண்டும் தோழர்களே காவிரி தஞ்சை மாவட்டத்தின் பிரச்சினை யல்ல தமிழர்களின் உரிமைப் பிரச்சினை. உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
தனித்தனி நாடுகளில் ஏற்படும் நதிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படும்போது ஏக இந்தியாவில் ஏன் தீர்க்க முடியவில்லை! சிந்திக்க வேண்டாமா?
காவிரி கருநாடகத்துக்கே என்று அவர்கள் சொன்னால் தமிழ்நாடு யாருக் காம்? கனடாவுக்குப் பக்கத்திலா இருக் கிறது தமிழ்நாடு?

Friday, 5 October 2012

காவிரி நதி நீர் உரிமை பிரச்சாரப் பயணம்






ஜெயங்கொண்டம்/வி.கைகாட்டி/அரியலூர், அக். 5- அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், விளாங்குடி கைகாட்டி மற்றும் அரியலூரில் காவிரி நதி நீர் உரிமை பிரச்சாரப் பெரும் பயணக் கூட்டம் அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத் தில் தலைமைக் கழகப் பேச்சாளர் மாங்காடு சுப.மணியரசன் தொடக்கவுரையாற்றினார்.  கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக உத்திரக்குடி சு.கலைவாணனின் மந்திரமா தந்திரமா எனும் அறிவியல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற கூட்டத் தில் ஒன்றிய செயலாளர் மா.கருணாநிதி வரவேற்றார். மண்டல செயலாளர் சி.காமராசு தலைமை ஏற்றார். அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன்,மாவட்ட செயலாளர்க.சிந்தனைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.கலிய மூர்த்தி, நகர தலைவர் எம்.எஸ்.நாராயணன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பு.கா.அன்பழகன், ஒன்றியத் தலைவர் வை.செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியத் தலைவர் ரா.தமிழரசன், ஒன்றிய செயலாளர் தியாக.முருகன், ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ்சேகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கார்த்திகேயன், உட்கோட்டை சி.பரமசிவம், ஆண்டி மடம்க.செந்தில், ராஜேஷ், ஆசிரியர் பிச்ச முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக நகர செயலாளர் துரை.பிரபாகரன் நன்றி கூறினார்.
வி.கைகாட்டி
விளாங்குடி கைகாட்டி கடைவீதியில் நடைபெற்ற கூட்டத்தில் அரியலூர் ஒன்றிய துணைத் தலைவர் மு.மருதமுத்து வரவேற்றார். அரியலூர் ஒன்றியத் தலைவர் சி. சிவக்கொழுந்து தலைமை ஏற்றார். மண் டல செயலாளர் சி.காமராசு, அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் மு.சிங்காரம், அரியலூர் நகர தலைவர் ரா.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர் ந.செல்லமுத்து, ஒன்றிய அமைப்பாளர் மு.கோபாலகிருட்டிணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அமைப் பாளர் கோ.பாண்டியன், மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.ராசா,வட்ட துணைத்தலைவர் ரா.திலீபன், மாவட்ட துணைச் செயலாளர் ரத்தின.ராமசந்திரன், ப.க மாவட்டத் தலைவர் பு.கா.அன்பழகன், மாவட்ட இளைஞரணித் தலைவர் பொன். செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் லெ.அர்ச்சுணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கா.கார்த்திகேயன், ஒன்றியத் தலை வர் மா.சங்கர், மறவனூர் மதியழகன், ம.தமிழ்மணி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் வெ.இளவரசன், ஒன்றிய செயலாளர் சோ.க.சேகர், ஒன்றிய அமைப்பாளர் மு.முத் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண் டனர். நிறைவாக உல்லியக்குடி தங்கராசு நன்றி கூறினார்.
அரியலூர்
அரியலூர் வட் டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற கூட்டத்தில் அரியலூர் ஒன்றிய அமைப்பாளர் மு.கோபாலகிருட்டிணன் வரவேற்றார். அரியலூர் நகர தலைவர் ரா.கோவிந்தராசன் தலைமை ஏற்றார். மண்டல செயலாளர் சி.காமராசு, அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, அரியலூர் ஒன்றிய செயலாளர் ந. செல்லமுத்து, ப.க மாவட்ட துணைத் தலைவர் பா.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.சிங்காரம், பேரா.தங்கவேல், சு.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அமைப்பாளர் கோ.பாண்டியன், மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.ராசா, மாவட்ட துணைத் தலைவர் ரா.திலீபன், மாவட்ட துணைச் செயலாளர் ரத்தின.ராமச்சந்திரன், ப.க மாவட்டத் தலை வர் பு.கா.அன்பழகன், மாவட்ட இளைஞரணித் தலைவர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் கா.கார்த்திகேயன், ஒன்றியத் தலைவர் மா.சங்கர், மறவனூர் மதியழகன்,ம.தமிழ்மணி, மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் வெ.இளவரசன், ஒன்றிய செயலாளர் சோ.க.சேகர், ஒன்றிய அமைப்பாளர் மு.முத்தமிழ்ச்செல்வன், எனோலா சி.அண்ணாதுரை, பிரச்சார பயண ஒருங்கிணைப்பாளர் த.சீ.இளந்திரையன், புத்தக விற்பனையாளர்கள் சாந்தகுமார், பிரகதீஷ், ஓட்டுநர்கள் விஜய், வெற்றி உள்பட பலர் கலந்துகொண் டனர். நகர செயலாளர் துரை.காமராஜ் நன்றி கூறினார்.


Monday, 1 October 2012

தாசிகளுடன் ஒரு மடாதிபதி


குடிஅரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்
தேச சஞ்சாரம் செய்து கொண்டு திரியும் ஒரு பார்ப்பன வைணவ மடாதிபதி இயல்பாய் இருக்க வேண்டிய மாசற்ற நடையின்றி இரவில் பலரும் அறியத் தாம் தங்கியுள்ள இடத்திற்கே தாசிகளைப் பயமின்றி வரவழைத்து, அவர்களிடம் ஒரு மாதிரி சிரித்துக் கொண்டும், குறும்புத்தன மாகவும் பேசுவார், இப்படிப்பட்ட ஆச்சாரியரிடம் நமது இளம் பெண்கள் பயபக்தியுடன் சென்று புண்ணியத்தை நிரப்பிக் கொண்டு வருவதை நினைக்கும் பொழுது கோபமும், துக்கமும் நமக்கு வராமலிருக்குமா? வந்து என்ன பயன்? நம் பெண்கள் தற்பொழுதும் சாமியார் களைத் தேடி மடங்களுக்குச் செல்வது குறைய வில்லையே! என் செய்வது?
ஒரு ஆச்சாரியரின் அடாதசெய்கை
அக்காலத்தில் கல்வி அறிவில் மிக்க தேர்ந்தவர்களாயும், உலக விஷயங்களில் இச்சையற்று மாசற்ற தடையை உடையவர்களாயும், தனது சீடர்களுக்கு உபதேசம் செய்து அவர்களை நல்வழிப் படுத்துவதிலேயே கவலை உடையவர்களாயும் உள்ள உத்தமர்களை ஆச்சார்யர்களாக வைத்திருந்தார்கள். இக்காலத்திலுள்ள, ஆச்சாரியர்களில் பெரும்பாலோர் பல விதத்திலும் குறைசொல்லக் கூடும்விதமான இருக்கின்றனர். பணம் தட்டிப் பறித்துக் கொண்டு போவதற்காகவே பெரும் பாலோர் சீடர்கள் வசிக்கும் இடங்களுக்குச் செல்லுகிறார்களே தவிர அவர்களுக்கு வேறு கவலை கிடையாது. தனக்கும் கொஞ்சம் கல்வி அறிவு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக தாங்கள் தங்கியிருக்கும் இடங்களில் இரண்டொரு காலக்ஷேபங்கள் செய்து ஏமாற்றுவதும் உண்டு. பணம் பெற்றுக்கொண்டு போவதுடன் நிற்காமல் அவர்கள் ஊரில் சிலருடைய செய்கை அறிவுடையார் மிக்க வெறுக்கத் தக்க நிலைமையில் இருந்து வருகின்றன. அவ்விதம் தற்சமயம் ஒரு வைணவப் பார்ப்பன மடாதிபதி தேச சஞ்சாரம் செய்துகொண்டு திரிகின்றார். அவர் அநேகமாக செல்லும் இடங்களில் எல்லாம் இரவில் பலரும் அறியத் தங்கியிருக்-கும் வீட்டிற்கே தாசிகளைப் பயமில்லாமல் வரவழைக்கிறார். யாராவது, தாசி இங்கு எதற்காக வரவேண்டுமென்று கேட்டால், இரண்டொரு வயிற்றுச் சோற்றுப் பக்தர்-களைத் தயார் செய்து வைத்துக் கொண்டு அவர்களை விட்டு, தாசிகள் சுவாமிகளிடம் சமார்ச்சனை செய்துகொள்ளுவதற்கு வந்து அலைந்து கொண்டிருக்கிறார்களென சொல்லச் செய்கிறார். இப்பேர்ப்பட்ட ஆச்சாரியரிடத்தில் நமது இளம் பெண்களைப் பக்தியுடன் சென்று சமார்ச்சனைச் செய்து-கொண்டு திரௌபதி வஸ்திராபரணம் கதையையும் கேட்கின்றார்கள். இவர்கள் பெண் பிள்ளைகளிடத்தில் பேசும்பொழுது ஒரு மாதிரி சிரித்துக்கொண்டும், குறும்-புத்தனமாகவும் பேசுகிறார். இந்தப் பார்ப்-பனருடைய கர்வமும், இறுமாப்பையும் நமம்மக்களிடம் உள்ள மடமையையும் நினைக்கும் பொழுது கோபமும் துக்கமும் வராமலிருக்குமா? கன்னி மேயோவிற்கு இவரைப்பற்றித் தெரியாமல் போய்விட்டது போலும்.
- தேவிதாஸன் குடிஅரசு11.12.1927, பக்கம், தகவல் முநீசி

பெரியார் சிலைக்கு மாலை





செப்.17 அன்று காலை 9 மணியளவில் அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலை மையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. பேச்சாளர் ச.அ.பெருநற்கிள்ளி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் செ.வே.மாறன், வி.சி. கட்சியின் பொறுப்பாளர் கரிகாலன், ப.க. மாவட்ட செயலாளர் தங்க.சிவமூர்த்தி, பக. மாவட்ட அமைப்பாளர் இரா.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் சு.மணிவண்ணன், பொன்.செந்தில் குமார், க.தனபால், மா.சங்கர், சோ.க.சேகர், இளவழகன், இராச.செல்வகுமார், பெ.கோபால், பதனம் இராமதாஸ், வெ.இளவரசன், ப.கருணாநிதி, மு.முத்தமிழ்ச்செல்வன், அரங்க.இளவரசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. செந்துறை அண்ணா சிலையில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப் பட்டது.இறுதியாக செந்துறை சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. இறுதியாக ஒன்றிய தலைவர் சங்கர் நன்றி கூறினார்.