Monday 12 November 2012

கடவுளே துணை (காலி மணிபர்ஸ்)



    சிலர் கடுதாசி எழுதும்போது கடவுள் துணை என்றுதான் எழுதுவது வழக்கம். கடவுளே துணை என்று ஏன் எழுதுவதில்லை தெரியுமா? கடுதாசிபோய்ச் சேருவதற்கு ஸ்டாம்பு துணை, சரியான விலாசம் துணை, தபாற்காரரின் நாணயமும் துணை என்றாலும், கடவுளும் துணையாயிருக்கட்டுமே, என்பது அதன் பொருள்!

       ஆனால், பெரியவர்கள் முதல் பெரியவர்களல்லாதவர்கள் வரையில், இப்போது கடவுளே துணை என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள்!
வங்காளத்தில் நான் எவ்வளவு நாள் தங்கியிருப்பேன் என்பது எனக்குத் தெரியாது. அடுத்தபடியாக நான் என்ன செய்யவேண்டும் என்பதைக் கடவுளே எனக்குச் சுட்டிக்காட்டவேண்டும் என்கிறார் காந்தியார். இதுதான் நல்ல பேச்சு! அடுத்தபடி இவர் தப்பாக நடந்துகொண்டாலும் கடவுள் தப்பு வழியில்அழைத்துப் போய்விட்டார், என்று கூறித் தப்பித்துக் கொள்ளலாம்! ஒரு வேளை நல்ல காரியமாக ஏதேனும் நடந்துவிட்டாலும், கடவுள் காந்தியாருக்கு எப்போதுமே துணையாக நிற்கிறார்; அதனால்தானே மகாத்மா என்ற பட்டம் பெற்றார், என்பார்கள் பாமரமக்கள். அதாவது பத்திரிகை படிப்பவர்கள்!

            ஆனால், இவருக்குச் சுட்டிக்காட்டவேண்டிய கடவுள் இந்துக் கடவுளா, முஸ்லிம் கடவுளா என்பதுதான் தெரிய வேண்டும்! ஏனெனில் வங்காளத்தில் கடவுள் ஒருவர் என்பதை நம்புகிறவர்கள் மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது. கடவுளும் கல்கத்தா காளிக்கு இரத்த அபிஷேகம் செய்து வேடிக்கைப் பார்க்கிறாரே தவிர, பிரிட்டிஷ் இராணுவத்தின் உதவியை நாடாமல், காந்தியாரின் அந்தாரத்மா மூலமாக இந்து-முஸ்லிம் ஒற்றுமையை உண்டாக்குவதாகக் காணோம்!

       காந்தியார்தான் இப்படி கடவுள்மீது பாரத்தைப் போட்டு விட்டார் எனக் கருதவேண்டியதில்லை. மந்திரி ராகவமேனன் திருச்செங்கோட்டில் பேசுகையில் பஞ்சத்தினால் ஒருவரும் உயிர்விடக் கூடாது என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன், என்று கூறியிருக்கிறார். கவலை ஒழிந்தது மந்திரியாரே! பசி, பசி! என்று இனிமேல் யாராவது கதறினால் நீர் சஞ்சலப்படவேண்டியதே இல்லை. கடவுள் இருக்கிறார்! நீங்கள் சாகமாட்டீர்கள்! என்று ஒரே வார்த்தையில் கூறி விடலாம்! அப்படியே செத்தால்தான் என்ன மோசம்! கடவுளே இவ்வாறு கட்டளையிட்டார், என்று சொல்லிவிட்டால் போகிறது!
சரி, கடவுளரே! நீர் இனிமேல் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். பெரியவர்கள் மட்டுமல்ல; சந்தேகப்படக்கூடிய ஆசாமிகள்கூட உங்கள் பெயரைத்தான் சொல்கிறார்கள்! கடவுள் சாட்சியாக நான் திருடவில்லை என்கிறான், மூர்மார்கெட்டில் முடிச்சவிழ்த்த முனிசாமி! ஆனால் நீர் மட்டும் மாஜிஸ்ட்ரேட்டுக்கு முன்பு வந்து ஒருநாளாவது சாட்சிக் கூண்டில் ஏறியிருப்பீரா? என்ன இரக்கமற்ற நெஞ்சு ஸார் உங்களுக்கு!
குடிஅரசு - கட்டுரை - 02.11.1946

No comments:

Post a Comment